Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

அடைமொழிகள்

அடைமொழிகள் என்றால் என்ன?

சொல்லியத்தின் முக்கிய உறுப்புக்கள் ஆன எழுவாய், பயனிலை மற்றும் செயற்படுபொருளை மிகவும் அழகாகவும், அழுத்தமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்த உதவுவது அடைமொழிகள் ஆகும்.

எ. கா :

  • சிறந்த ஆசிரியர் - எழுவாய் அடைமொழி

  • காற்று வேகமாக வீசியது - பயனிலை அடைமொழி

  • குழந்தை பெரிய பானையை உடைத்தது - செயற்படுபொருள் அடைமொழி

ஒரு பெயரை அல்லது ஒரு வினையை விளக்குவதற்காக பயன்படுத்தப்படும் சொற்கள் அடைமொழிகள் எனப்படும்.

அடைமொழியின் பயன்கள்:

  • பெயர்ச்சொல், வினைச்சொல் என்பனவற்றின் தன்மையை விளக்க உதவும் 

  • பெயர்ச்சொல், வினைச்சொல் என்பனவற்றின் சிறப்பியல்புகளை விளக்க உதவும்

  • வாக்கியத்தின் சுவாரசியத்தை கூட்டுவதற்கும் பயன்படும்

அடைமொழிகள் இரண்டு வகைப்படும்.

அடைமொழி வகைகள்

1.பெயரடை 

ஒரு பெயர்ச்சொல்லை விளக்கமாகவோ அல்லது விரிவாகவோ வர்ணித்து வரும் அடைமொழி பெயரடை எனப்படும்.

எ. கா : நல்ல நூல் படித்தேன்.

இத்தொடரில், நல்ல என்னும் சொல், எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடைமொழியாக வருகின்றது. இவ்வாறு அமைவதை பெயரடை என்கிறோம்.

பெயரடை  இரண்டு வகைப்படும்.

1.1 தனிப்பெயரடை

1.2 கூட்டுப்பெயரடை (ஆக்கப்பெயரடை)

1.1 தனிப்பெயரடை

பெயர்ச்சொற்களை விவரித்து வரும் பெயரடை தனிச்சொல்லாக வருமாயின் அதுவே தனிப் பெயரடை எனப்படும்.

எ. கா :

  • நல்ல பையன் 

  • புதிய வீடு

1.2 கூட்டுப்பெயரடை(ஆக்கப்பெயரடை)

பெயர்ச்சொற்களை விவரித்து வரும் பெயரடை கூட்டுச்சொல்லாக  வருமாயின் அதுவே கூட்டுப்பெயரடை(ஆக்கப்பெயரடை) எனப்படும்.

எ. கா :

  • அழகான குழந்தை 

  • சுவையுள்ள உணவு

இதில் அழகான என்னும் சொல் அழகு + ஆன என்னும் சொற்களின் கூட்டாகும். அவ்வாறாக சுவையுள்ள - சுவை + உள்ள என்பதின் கூட்டாகும்.

2.வினையடை

ஒரு வினைச்சொல்லை விளக்கமாகவோ அல்லது விரிவாகவோ  வர்ணித்து வரும் அடைமொழி வினையடை எனப்படும்.

எ. கா : குமரன் மெல்ல வந்தான்.

இத்தொடரில், மெல்ல எனும் சொல் வந்தான் என்னும் வினை பயனிலைக்கு அடையாக வருகின்றது. இவ்வாறு அமைவதை வினையடை என்கிறோம்.

வினையடை இரண்டு வகைப்படும்.

2.1 தனிவினையடை

2.2 கூட்டுவினையடை (ஆக்கவினையடை)

2.1 தனிவினையடை

வினைச்சொற்களை விவரித்து வரும் வினையடை தனிச்சொல்லாக வருமாயின் அதுவே தனிவினையடை எனப்படும்.

எ. கா :

  • நேற்று வந்தான் 

  • மெல்ல வா

2.2 கூட்டுவினையடை (ஆக்கவினையடை)

வினைச்சொற்களை  விவரித்து  வரும் வினையடை கூட்டுச்சொல்லாக  வருமாயின் அதுவே கூட்டுவினையடை(ஆக்கவினையடை) எனப்படும்.

 எ. கா : சிறப்பாக பாடினான் 

இதில் சிறப்பாக என்னும் சொல் சிறப்பு +ஆக  என்பதின் கூட்டாகும்.

 


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org