உவமை அணி
அணி என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். ஒருவர் தான் கூற வந்த கருத்தை அழகுறச் சொல்வதற்காகப் பயன்படுத்தப்படுவது அணி என்பதாகும். அணியில் ஒரு வகை உவமை அணி ஆகும். இவ்வணி ஒரு பொருளின் தன்மையைச் சிறப்புற உணர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும். அதாவது ஒரு பொருளை இன்னொரு பொருளோடு ஒப்பிட்டு, கூற வந்த பொருளின் சிறப்பை வெளிக்காட்டுவதே இவ்வணியின் நோக்கமாகும்.
உவமை அணியில் உவமானம், உவமேயம், பொதுத்தன்மை ஆகிய மூன்று உறுப்புகளும், போன்ற, ஒப்ப, அன்ன ஆகிய உவமையுருபுகளும் இடம்பெறும்.
எடுத்துக்காட்டு
மலைத்தோள் என்ற உவமை அணியை விரித்துப் பார்த்தால் அது மலை போன்ற தோள் என்று விரியும். இதில் சிறப்பித்துக் கூறப்படும் சொல் தோள் ஆகும், இதுவே உவமேயம். “தோள்” என்ற சொல்லை சிறப்பிக்கப் பயன்படுத்தப்படும் சொல் மலை ஆகும், இதுவே உவமானம் ஆகும். மலை போன்ற வலிமையான தோள் என்று கூறுவதற்காகவே இச்சொற்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளன. ஆகவே வலிமை என்பது இவ்வணியின் பொதுத்தன்மை ஆகும். உவமானத்துக்கும் உவமேயத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பு பொதுத்தன்மை ஆகும். இதில் உள்ள உவமை உருபு போன்ற ஆகும்.