பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் என்றால் ஒரு பொருளின் பெயரை உணர்த்தும் சொல்லாகும். அப்பொருட்களைக் கண்களால் காணலாம்; காதால் கேட்கலாம் அல்லது வேறு வழிகளிலும் உணரலாம்.
எ + கா: படம், தங்கை, கடவுள், அம்மா, அன்பு, யேர்மனி
இப்பெயர்ச்சொற்கள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என ஆறு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
பொருட்பெயர்
ஒரு பொருளைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். அது உயிருள்ள மற்றும் உயிரில்லாத பொருட்களைக் குறிக்கும்.
எ + கா: படம் , மேசை, அம்மா, ஆடு
இடப்பெயர்
ஒர் இடத்தைக் குறிக்கும் சொல் இடப்பெயர்எனப்படும்.
எ + கா: வீடு, அமெரிக்கா, கடற்கரை, யாழ்ப்பாணம்
காலப்பெயர்
ஒரு காலத்தைக் குறித்து நிற்கும் சொல் காலப்பெயர் எனப்படும்.
எ + கா: அதிகாலை, ஞாயிறு, இரவு, தை
சினைப்பெயர்
ஒரு பொருளின் உறுப்பைக் குறித்து நிற்கும் சொல் சினைப்பெயர் எனப்படும்.
எ + கா: கை, மரவேர், மூக்கு, சிறகு
குணப்பெயர்
ஒரு பொருள் எப்படி இருக்கும் என்று கூறுவது குணப்பெயர் அல்லது பண்புப்பெயர் ஆகும். இது நிறம், சுவை, அளவு, வடிவம், உணர்வு என்பனவற்றைக் குறிக்கும்.
எ கா: அன்பு, அழகு, சதுரம், சிவப்பு
தொழிற்பெயர்
ஒரு தொழிலைக் குறிப்பது தொழிற்பெயர் ஆகும்.
எ + கா: எழுதுதல், பாடுதல், சிரித்தல், பேசுதல்